செய்திகள்
மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி

டி.கே.சிவக்குமார் போலீஸ் கமிஷனரை மிரட்டுவது சரியல்ல: மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி

Published On 2020-08-24 02:50 GMT   |   Update On 2020-08-24 02:50 GMT
போலீஸ் கமிஷனரை மிரட்டுவது சரியல்ல என்றும், டி.கே.சிவக்குமார் ஜாமீனில் வெளியே இருப்பதை மறந்து விடக்கூடாது என்றும் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
உப்பள்ளி :

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறையில் அரசின் கைபாவையாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் செயல்படுவதாகவும், அவரை மிரட்டும் விதமாகவும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேசி இருந்தார். அத்துடன் தனது தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்படுவதாகவும் அவர் குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

இதுகுறித்து உப்பள்ளியில் நேற்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

பெங்களூரு டி.ஜே.ஹள்ளியில் நடந்த வன்முறை தொடர்பாக போலீசார் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். வன்முறையின் போது போலீஸ் நிலையத்திற்கே தீவைக்கப்பட்டதுடன், போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி இருந்தனர். வன்முறையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்ததால் தான் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவது தவிர்க்கப்பட்டது. ஆனால் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் ஒரு நேர்மையான அதிகாரி. அவரை மிரட்டும் விதமாக டி.கே.சிவக்குமார் பேசியுள்ளார். போலீஸ் கமிஷனரை மிரட்டுவது சரியல்ல. டி.கே.சிவக்குமாருக்கு சட்டத்தை பற்றி எதுவும் தெரியவில்லை.

அவர் மீது சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக வழக்கு உள்ளது. அவருக்கு சொந்தமான வீடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் சிக்கியதால், அந்த வழக்கை எதிர்த்து கொண்டு வருகிறார். சிறைக்கு சென்ற அவர் ஜாமீனில் தான் வந்துள்ளார். தற்போது டி.கே.சிவக்குமார் ஜாமீனில் வெளியே இருப்பதை மறந்து விட்டு வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. ஜாமீனில் வெளியே இருப்பதையும் மறந்து விடக்கூடாது. தனது தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்படுவதாக சொல்வதை நம்ப முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News