செய்திகள்
விபத்துக்குள்ளான விமானம்

கேரள விமான விபத்து : 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு - 5 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Published On 2020-08-13 22:47 GMT   |   Update On 2020-08-13 22:47 GMT
கேரள விமான விபத்து ஏற்பட காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 5 மாதத்திற்குள் விசாரணையை நிறைவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி: 

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது.

அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.

விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இதற்கிடையில், விமானம் தரையிறங்கும்போது பெய்த கனமழை மற்றும் ஓடுதளத்தில் மழை நீர் தேங்கி இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கருத்துக்கள் நிலவின.

பின்னர் விமானியின் தன்னிச்சையான முடிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி வருகிறது. 

இதற்கிடையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் பதிவான தகவல்களை முழுமையாக ஆராய்ந்தால் இந்த விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரலாம்.

இந்நிலையில், கேரள விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள விமான விபத்து விசாரணை முகைமை குழு ஒன்றை அமைத்துள்ளது.

5 பேரை கொண்ட அந்த குழுவின் தலைவராக கேப்டன் எஸ்.எஸ். சாஹர் நியமணம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த 5 பேர் கொண்ட குழு விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய்ந்து அடுத்த 5 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு பிற விசாரணை குழுக்களிடம் இருந்து தேவையான ஆலோசனைகளை பெறவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கு மேற்கொள்ளும் பல்வேறு கட்ட விசாரணைகளில் கேரள விமான விபத்து நடைபெற்றதற்கான காரணங்கள் எவை என்பது குறித்த உண்மையான தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், விபத்து நடைபெற்ற கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் தரையிறங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News