செய்திகள்
டெல்லி ஐகோர்ட்டு

இஐஏ அறிக்கை விவகாரம்- கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

Published On 2020-08-12 03:06 GMT   |   Update On 2020-08-12 03:06 GMT
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மொழிபெயர்க்கப்படாததால் மத்திய அரசு மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, 17-ந்தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 பற்றி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த மதிப்பீட்டு அறிக்கையை ஆங்கிலம், இந்தி உள்பட 22 இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டால்தான் அதுபற்றி சரியான கருத்துக்களை பொதுமக்களால் கூறமுடியும் என்று கூறி, அதற்கு உத்தரவிட வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர் விக்ராந்த் டோங்கட் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் சச் தேவா, ஜூன் 30-ந்தேதி 10 நாட்களுக்குள் 22 மொழிகளிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன்படி பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான கடைசி தேதியை ஆகஸ்டு 11-ந் தேதி (அதாவது நேற்று) வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் கோர்ட்டு உத்தரவுப்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 22 இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்படவில்லை. அதற்கான காலஅவகாசமும் கோரவில்லை. இதனைத்தொடர்ந்து டோங்கட் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மத்திய அரசு மீது அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவுக்கு வருகிற 17-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் அரசியலமைப்பின் 8-வது அட்டவணைப்படி பிற மொழிகளிலும் அறிக்கை வெளியிடப்பட்டால் அது திறம்பட பரவுவதற்கு உதவியாக இருக்கும் என்றும், மொழிபெயர்ப்புக்கு மாநில அரசின் உதவியையும் கோரலாம் என்றும், இந்த மொழிபெயர்ப்புகள் மத்திய, மாநில சுற்றுச்சூழல் அமைச்சகங்களின் வலைத்தளங்களில் 10 நாட்களுக்குள் வெளியிடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News