செய்திகள்
கலெக்டர் சுந்தரேஷ் பாபு

மனைவியை பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த கதக் கலெக்டர்

Published On 2020-08-11 02:47 GMT   |   Update On 2020-08-11 02:47 GMT
கதக் மாவட்ட கலெக்டரான தமிழகத்தை சேர்ந்த சுந்தரேஷ் பாபு தனது மனைவியை பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரது மனைவி அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
கதக் :

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா தாக்கி வருகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்வது இல்லை. அதற்கு மாறாக தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட சில மக்கள் பிரதிநிதிகளும் தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஒரு மாவட்ட கலெக்டர் தனது மனைவியை பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த சம்பவம் கர்நாடகத்தில் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

தமிழ்நாடு தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர் சுந்தரேஷ் பாபு. 2012-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். குழுவை சேர்ந்த சுந்தரேஷ் பாபுவுக்கு திருமணமாகி சிவசங்கரி(வயது 27) என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சுந்தரேஷ் பாபு தற்போது கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சுந்தரேஷ் பாபுவின் மனைவி சிவசங்கரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கர்நாடகத்தில் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு பணியிட மாற்றம் செய்தது. அப்போது கதக் மாவட்ட கலெக்டராக சுந்தரேஷ் பாபு நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி கதக் மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்று இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு சிவசங்கரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரை கலெக்டர் சுந்தரேஷ் பாபு பிரசவத்திற்காக கதக் மாவட்ட அரசு மருத்துவமனையான ஜிம்சில் அனுமதித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிவசங்கரி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 3 கிலோ 4 கிராம் எடையுடன் இருந்தது. தாய்க்கும், சேய்க்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது 2 பேரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News