செய்திகள்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் தொற்று பாதிப்பு 19 லட்சத்தை கடந்தது - பலி 40 ஆயிரத்தை நோக்கி விரைகிறது

Published On 2020-08-05 20:04 GMT   |   Update On 2020-08-05 20:04 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 19 லட்சத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை நோக்கி விரைகிறது.
புதுடெல்லி:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பரவல் இன்னும் தொடர்கதையாய் நீளுகிறது. நேற்று மதியம், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் புள்ளிவிவரம், உலகமெங்கும் 1 கோடியே 85 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் அதிகமானோரை இந்த தொற்று பாதித்திருப்பதை காட்டியது. அதே நேரம், இந்த கொலைகார வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்து விட்டதையும் தெரிவித்தது.

உலகின் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. அங்கு 49 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தன் பிடியில் வைத்துள்ளது. 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றும் உள்ளது.

இரண்டாவது மோசமான பாதிப்பை அடைந்துள்ள நாடாக பிரேசில் தொடர்கிறது. அங்கு 28 லட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மோசமான பாதிப்பில் மூன்றாவது நாடாக இந்தியா இருக்கிறது.

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று 52 ஆயிரத்து 509 பேரை பாதித்து இருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 19 லட்சத்து 8 ஆயிரத்து 254 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா தொற்று 18 லட்சத்தை கடந்து சரியாக 2 நாளில் 19 லட்சத்தை தாண்டி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து 7-வது நாளாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தன் பிடியில் கொரோனா கொண்டு வந்துள்ளது.

ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு நாடு முழுவதும் 857 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதையடுத்து இந்தியாவில் இதுவரை இந்த தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கையானது, 39 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது. இன்று இந்த எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்து விடும்.

நேற்று மராட்டியத்தில் அதிகபட்சமாக 300 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இரண்டாவது இடத்தை கர்நாடகம் (110) பிடித்தது. 3-வது இடத்தில் தமிழகம் உள்ளது.

அதே நேரம் ஆந்திராவில் 67, மேற்கு வங்காளத்தில் 54, உத்தரபிரதேசத்தில் 39, குஜராத்தில் 25, பஞ்சாப்பில் 20, ராஜஸ்தான் மற்றும் பீகாரில் தலா 17, தெலுங்கானாவில் 13, மத்திய பிரதேசம் மற்றும் டெல்லியில் தலா 12, ஜம்மு காஷ்மீரில் 10 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

ஒடிசாவில் 9 பேரும், சத்தீஷ்கார், அரியானாவில் தலா 8 பேரும், அசாமில் 6 பேரும், உத்தரகாண்டில் 5 பேரும், கோவாவில் 4 பேரும், கேரளாவிலும், ஜார்கண்டிலும் தலா 3 பேரும், அந்தமான் நிகோபார், புதுச்சேரி, திரிபுராவில் தலா 2 பேரும், சண்டிகாரில் ஒருவரும் கொரோனாவின் கொலைப்பசிக்கு இரையாகி உள்ளனர்.

இதுவரை பலியான 39 ஆயிரத்து 795 பேரில் 16 ஆயிரத்து 142 பேரை இழந்துள்ள மராட்டியம், முதல் இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் தமிழகம் இருக்கிறது. மூன்றாம் இடத்தில் டெல்லி (4,033) உள்ளது.

கர்நாடகத்தில் 2,704, குஜராத்தில் 2,533, உத்தரபிரதேசத்தில் 1,817, மேற்கு வங்காளத்தில் 1,785, ஆந்திராவில் 1,604, மத்தியபிரதேசத்தில் 962 பேர் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள்.

ராஜஸ்தானில் 732 பேரும், தெலுங்கானாவில் 576 பேரும், பஞ்சாப்பில் 462 பேரும், அரியானாவில் 448 பேரும், ஜம்மு காஷ்மீரில் 417 பேரும், பீகாரில் 347 பேரும், ஒடிசாவில் 216 பேரும், ஜார்கண்டில் 128 பேரும், அசாமில் 115 பேரும், உத்தரகாண்டில் 95 பேரும், கேரளாவில் 87 பேரும், சத்தீஷ்காரில் 69 பேரும், கோவாவில் 60 பேரும், புதுச்சேரியில் 58 பேரும், திரிபுராவில் 30 பேரும், சண்டிகாரில் 20 பேரும், இமாசலபிரதேசத்தில் 14 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றானது அந்தமான் நிகோபாரில் 12 பேரையும், லடாக், மணிப்பூரில் தலா 7 பேரையும், மேகாலயா, நாகலாந்தில் தலா 5 பேரையும், அருணாசலபிரதேசத்தில் 3 பேரையும், தத்ராநகர்ஹவேலி தாமன் தையுவில் 2 பேரையும், சிக்கிமில் ஒருவரையும் கொன்றிருக்கிறது.

அதே நேரத்தில் பலி விகிதம் 2.09 சதவீதமாக குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து இதுவரை வீடு திரும்பியோர் எண்ணிக்கை 12 லட்சத்து 82 ஆயிரத்து 215 ஆக உள்ளது. குணம் அடைந்தோர் விகிதம் 67.19 சதவீதம் ஆகும்.

தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 244 ஆக உள்ளது. இது மொத்த நோயாளிகளில் 30.72 சதவீதம்.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2 கோடியே 14 லட்சத்து 84 ஆயிரத்து 402 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரம் கூறுகிறது.
Tags:    

Similar News