செய்திகள்
கொரோனா வைரஸ்

19 மாநிலங்களில் கொரோனாவுக்கு குணமடைந்தோர் விகிதம் அதிகம்

Published On 2020-07-14 04:16 GMT   |   Update On 2020-07-14 04:16 GMT
19 மாநிலங்களில் கொரோனாவுக்கு குணமடைந்தவர்கள் விகிதம், தேசிய அளவிலான சராசரியை விட அதிகமாக உள்ளது.
புதுடெல்லி:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 18 ஆயிரத்து 850 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 53 ஆயிரத்து 470 ஆக உயர்ந்துள்ளது. இது, 63.02 சதவீதம் ஆகும்.

இந்த தேசிய அளவிலான சராசரியை விட 19 மாநிலங்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் அதிகமாக உள்ளது.

குறிப்பாக, லடாக்கில் குணமடைந்தவர்கள் விகிதம் 85.45 சதவீதமாகவும், டெல்லியில் 79.98 சதவீதமாகவும், உத்தரகாண்டில் 78.77 சதவீதமாகவும், சத்தீஸ்காரில் 77.68 சதவீதமாகவும், இமாசலபிரதேசத்தில் 76.59 சதவீதமாகவும் உள்ளது.

தற்போது, 3 லட்சத்து ஆயிரத்து 609 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானோர் விகிதம் 2.64 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த தேசிய சராசரியை விட 30 மாநிலங்களில் பலியானோர் விகிதம் குறைவாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 103 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் ஒரு கோடியே 18 லட்சத்து 6 ஆயிரத்து 256 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நோயாளிகளை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதும், மத்திய, மாநில அரசுகளின் நோய் தடுப்பு நடவடிக்கைகளும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளும்தான் குணமடைந்தவர்கள் விகிதம் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News