செய்திகள்
எம்எல்ஏ தேபேந்திர நாத் ரே சடலமாக மீட்கப்பட்ட பகுதியில் திரண்ட மக்கள் (உள்படம்: எம்எல்ஏ)

மேற்கு வங்காள பாஜக எம்எல்ஏ மர்ம மரணம்- கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

Published On 2020-07-13 08:59 GMT   |   Update On 2020-07-13 08:59 GMT
மேற்கு வங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் எழுதி உள்ள குறிப்பில் 2 நபர்களின் பெயர்கள் உள்ளதால் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் ஹெம்தாபாத்தைச்  சேர்ந்த பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ரே. இவர் தனது வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள கடை அருகில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இறப்பதற்கு முன்பு தேபேந்திர நாத் ரே எழுதிய குறிப்பு அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதில் தனது மரணத்திற்கு காரணம் என 2 பேரின் பெயரை குறிப்பிட்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இறந்த எம்எல்ஏவின் குடும்பத்தினர் கூறும்போது, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சில நபர்கள் வீட்டிற்கு வந்த எம்எல்ஏவை அழைத்துச் சென்றதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பி உள்ளனர். சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது உறவினர்  கூறி உள்ளார்.

எம்எல்ஏ தேபேந்திர நாத் தற்கொலை செய்யவில்லை எனவும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பா.ஜனதா தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், மேற்கு வங்காளத்தின் ஹெம்தாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ரே படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கிறோம். இது மம்தா அரசின் சட்டம் ஒழுங்கு தோல்வி அடைந்ததை காட்டுகிறது’ என கூறி உள்ளார்.
Tags:    

Similar News