செய்திகள்
ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஜோதிராதித்ய சிந்தியா

ராஜஸ்தான் சிக்கலுக்கு மத்தியில் ம.பி. அமைச்சரவையில் சிந்தியா ஆதரவாளர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கீடு

Published On 2020-07-13 05:23 GMT   |   Update On 2020-07-13 05:23 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
போபால்:

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல் மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே பகிரங்கமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டத்திற்கு பிறகு இதன் தாக்கம் என்னவென்று தெரியவரும். 

எனவே, காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. கர்நாடகா, மத்திய பிரதேசத்தைப் போன்று இன்னொரு மாநிலத்தையும் இழக்க காங்கிரஸ் விரும்பவில்லை. சச்சின் பைலட்டை எப்படியாவது சமாதானம் செய்து ஆட்சியை தக்க வைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி வழங்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரசை விட்டு விலகிய ஜோதிராதித்ய சிந்தியா, அவருடன் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதால் கமல்நாத் அரசு கவிழ்ந்து பா.ஜ.க. அரசு ஆட்சியமைத்திருக்கிறது. அதன்பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

தற்போது ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவின் தீவிர ஆதரவாளர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கோவிந்த்சிங் ராஜ்புத்துக்கு வருவாய் மற்றும் போக்குவரத்து துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் பிரபுராம் சவுத்ரிக்கு சுகாதாரத்துறையும், பிரத்யூம்ன சிங் தோமர், இமார்தி தேவி ஆகியோருக்கு முறையே எரிசக்தி மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவின் யசோதரா ராஜே சிந்தியாவுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை, நரோத்தம் மிஷ்ராவுக்கு மாநில உள்துறை, பாராளுமன்ற விவகாரம், சட்டம் மற்றும் நீதி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News