செய்திகள்
சந்திரசேகரராவ்

தலைமை செயலக கட்டிடத்தை இடித்தபோது கோவில், மசூதி சேதமடைந்ததற்கு சந்திரசேகர ராவ் வருத்தம்

Published On 2020-07-11 03:07 GMT   |   Update On 2020-07-11 03:07 GMT
ஐதராபாத்தில் பழைய தலைமை செயலக கட்டிடத்தை இடித்தபோது சேதமடைந்த கோவில், மசூதிக்கு பதிலாக புதிய கோவில், மசூதி கட்டித்தரப்படும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் உறுதி அளித்துள்ளார்.
ஐதராபாத் :

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில், நிஜாம் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் தலைமை செயலகம் செயல்பட்டு வந்தது. அது பழையதாகி விட்டதால், அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.

அப்படி இடிக்கும்போது, அந்த இடிபாடுகள், அதே வளாகத்தில் உள்ள கோவில், மசூதி மீது விழுந்தன. இதனால், கோவிலும், மசூதியும் சேதமடைந்தன.

இந்நிலையில், இதுகுறித்து முதல்-மந்திரி சந்திரேசேகர ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பழைய தலைமை செயலக கட்டிடம் இடிக்கப்படும்போது, கோவிலும், மசூதியும் சேதமடைந்ததாக கேள்விப்பட்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். அப்படி நடந்திருக்கக்கூடாது. கோவிலுக்கோ, மசூதிக்கோ எந்த சேதமும் இல்லாமல் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.

புதிய தலைமை செயலக கட்டுமான பணி தொடங்கி உள்ளது. அந்த வளாகத்தில் பெரிய நிலப்பரப்பில் கோவிலும், மசூதியும் அரசு செலவில் கட்டித்தரப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

அதற்கு எத்தனை கோடி செலவானாலும் கட்டித்தந்து, சம்பந்தப்பட்ட நிர்வாகங்களிடம் ஒப்படைப்போம். இதுதொடர்பாக கோவில் மற்றும் மசூதி நிர்வாகிகளை விரைவில் அழைத்துப் பேசுவேன்.

தெலுங்கானா மாநிலம், மதச்சார்பற்ற மாநிலம். என்ன ஆனாலும் அந்த உணர்வை பின்பற்றுவோம். இந்த சம்பவம், எதிர்பாராமல் நிகழ்ந்து விட்டது. இதை எல்லோரும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News