செய்திகள்
வைரல் புகைப்படம்

சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனருக்கு ரூ. 21 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக புகைப்படம் வைரல்

Published On 2020-07-08 04:12 GMT   |   Update On 2020-07-08 04:12 GMT
உத்திர பிரதேச மாநிலத்தில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனருக்கு ரூ. 21 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



சைக்கிள் ரிக்ஷாவுடன் ஒருவர் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் இருப்பவர் லக்னோவை சேர்ந்த கலீம் என்பதும், உத்திர பிரதேச மாநில அரசாங்கம் இவருக்கு ரூ. 21 லட்சம் அபராதம் விதித்து சிறையில் அடைத்து இருப்பதாக வைரல் தகவல்களில் கூறப்படுகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை தனது சைக்கிள் ரிக்ஷாவில் கொண்டு வந்து குவித்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

வைரல் தகவல்களை ஆய்வு செய்ததில், இதேபோன்ற சம்பவம் அரங்கேறி இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், வைரல் புகைப்படத்திற்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதே புகைப்படம் அடங்கிய செய்தி தொகுப்பு ஏப்ரல் 3 ஆம் தேதி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. 

அந்த செய்தி குறிப்பில் உத்தம் குமார் சிங் என்ற சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனர் ஊரடங்கில் பொது மக்களுக்கு உதவியாக இருந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இவர் மோத்தி நகர் மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து வீடுகளுக்கு செல்ல முடியாமல் சிக்கி தவித்தவர்களை இலவசமாக அவரவர் வீடுகளுக்கு கொண்டு சேர்த்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜூலை 4 ஆம் தேதி வெளியாகி இருக்கும் மற்றொரு செய்தி குறிப்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தொடர்புடையவர்களில் அபராதம் செலுத்தாமல் இருந்த முதல் நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது ரூ. 21.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவரது பெயர் முகமது கலீம் இவர் டிசம்பர் 19, 2019 இல் லக்னோ கலவரத்தில் தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது. 

அந்த வகையில் வைரல் தகவல் உண்மை என்பதும், வைரல் புகைப்படத்திற்கும் அதனுடன் இணைக்கப்பட்ட புகைப்படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உறுதியாகி இருக்கிறது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News