செய்திகள்
இந்தியா-சீனா எல்லை

எல்லையில் பதற்றம் தணியுமா? இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை

Published On 2020-06-30 06:57 GMT   |   Update On 2020-06-30 06:57 GMT
இந்தியா, சீனா இடையிலான எல்லை பிரச்சினை தொடர்பாக, ராணுவ கமாண்டர்கள் இடையியே மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
புதுடெல்லி:

கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து இந்திய-சீன எல்லை முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு தரப்பும் படைகளை குவித்தன. அதேசமயம் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருதரப்பு ராணுவமும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளன. 

ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்ப பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி எல்லையில் படை விலக்கலுக்கான நடவடிக்கைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவி, இந்திய பகுதிக்குள் முகாமிட்டு உள்ளதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்தன.

இந்த நிலையில் லடாக் மோதல் தொடர்பாக ராணுவ கமாண்டர்கள் அளவிலான மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் உள்ள சுசுல் செக்டாரின் இந்திய பகுதிக்குள் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில், எல்லையில் பதற்றத்தை தணிப்பது குறித்தும், படைகள் விலக்கலுக்கான வழிமுறைகளை இறுதி செய்வது குறித்தும் இருதரப்பும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழுவினரும், சீன தரப்பில் திபெத் ராணுவ படைப்பிரிவு கமாண்டர் தலைமையிலான குழுவும் பங்கேற்றுள்ளனர். 
Tags:    

Similar News