செய்திகள்
மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி

காலி பாத்திரங்கள் அதிக சத்தம் போடும்- காங்கிரஸ் மீது மத்திய மந்திரி நக்வி கடும் தாக்கு

Published On 2020-06-29 10:15 GMT   |   Update On 2020-06-29 10:15 GMT
ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்த முடியாத ஒரு வலுவான அரசாங்கம் மத்தியில் உள்ளது என்ற உண்மையை எதிர்க்கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை என மத்திய மந்திரி நக்வி தெரிவித்தார்.
புதுடெல்லி:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சமீபத்தில் கிழக்கு லடாக்கில் உள்ள சீன எல்லை பதற்றம் மற்றும் பொருளாதார நிலை ஆகிய விஷயங்களில் மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். இதற்கு பாஜக தலைவர்களும் அவ்வப்போது பதில் அளிக்கின்றனர்.

இந்நிலையில், மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரில் பல்நோக்கு சமூக மையத்திற்கு அடிக்கல் நாட்டி பேசினார். அப்போது, காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:-

மத்தியில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்த முடியாத ஒரு வலுவான அரசாங்கம் உள்ளது என்ற உண்மையை எதிர்க்கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் கூறிய கருத்துக்கள், காலி பாத்திரங்கள் அதிக சத்தம் போடும் என்ற பழமொழியை நினைவூட்டுகின்றன. 

காங்கிரஸ் தலைவர்கள் தங்களை மெத்த படித்தவர்கள் என்று நிரூபிக்கும் முயற்சியில் தங்கள் சொந்த கட்சியையே அழித்துக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு காலம் சென்றாலும் ஒருவரின் இயல்பை மாற்ற முடியாது. அவர்கள் (காங்கிரஸ்) குறுகிய எண்ணம் கொண்ட அறிவின் அடிப்படையில்,  தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், ஏழைகளின் நலன், விவசாயிகளின் நலன்கள் தொடர்பான விஷயங்களில் உத்தரவு போட முயற்சிக்கின்றனர்.

நாடு தான் முதலில் என்பது மோடி அரசாங்கத்தின் மந்திரம். நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் செழிப்புக்கு மத்திய அரசு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதாரம், எல்லைகளின் பாதுகாப்பு அல்லது தேசிய பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும்  மோடி அரசு வளர்ச்சியின் புதிய சாதனைகளை படைத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News