செய்திகள்
பாகிஸ்தானை வாழ்த்தி கோஷமிட்ட அமுல்யா

‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு 110 நாட்களுக்கு பிறகு ஜாமீன்

Published On 2020-06-12 03:26 GMT   |   Update On 2020-06-12 03:26 GMT
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது பாகிஸ்தான் வாழ்க என்று கோஷமிட்டதால் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு 110 நாட்களுக்கு பிறகு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இப்போராட்டத்தில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சிச் தலைவரும் ஐதராபாத் தொகுதி எம்பியுமான அசாதுதீன் ஓவைசி பங்கேற்றார். ஓவைசி பேசுவதற்காக மேடைக்கு வந்தார். அப்போது திடீரென மேடை ஏறிய அமுல்யா லியோனா என்ற இளம்பெண் (வயது 19), மைக்கை பிடித்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று பாகிஸ்தானை வாழ்த்தி கோஷம் போட்டார்.

இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளரான அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அடுத்தடுத்து அவரது ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று பெங்களூரு அமர்வு நீதிமன்றத்தில் அமுல்யாவின் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. அவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். அவரை சிறையில் இருந்து விடுவித்தால், தலைமறைவாகிவிடுவார் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

அதன்பின்னர் நேற்று இரவு மற்றொரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் 90 நாட்களுக்குள் பெங்களூரு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறிவிட்டதால், அந்த அடிப்படையில் அமுல்யாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 110 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு இன்று அவர் ஜாமீனில் வெளிவர உள்ளார்.
Tags:    

Similar News