செய்திகள்
நிரவ் மோடி

வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல்

Published On 2020-06-10 22:16 GMT   |   Update On 2020-06-10 22:16 GMT
வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான 1,350 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், முத்துகள் ஆகியவை அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுடெல்லி:

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
 
தற்போது லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடி, பலமுறை ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கிடையே, ரூ.13 ஆயிரம் கோடி வங்கி மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரை அமலாக்கத்துறை தேடி வருகிறது.

இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரது நிறுவனங்களுக்கு சொந்தமான 2 ஆயிரத்து 300 கிலோ எடையுள்ள பட்டை தீட்டப்பட்ட வைரம், முத்துகள், வெள்ளி நகைகள் ஆகியவற்றை அமலாக்கத்துறை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1,350 கோடி ஆகும்.

நேற்று ஹாங்காங்கில் இருந்து மும்பைக்கு இவை வந்து சேர்ந்தன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டப்படி, இப்பொருட்கள் முறைப்படி பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News