செய்திகள்
சிறப்பு ரெயில் தாமதமாக இயக்கப்பட்டதால் தாராவியில் சாலையில் தவிக்கும் தமிழக பயணிகள்.

இரவு முழுவதும் சாலையில் தவித்த தமிழக பயணிகள்

Published On 2020-05-28 03:10 GMT   |   Update On 2020-05-28 03:10 GMT
தாமதமாக இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலால் தமிழக பயணிகள் இரவு முழுவதும் தண்ணீர், உணவு இன்றி சாலையில் தவித்தனர்.
மும்பை :

மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து தமிழகத்திற்கு நேற்று முன்தினம் 2 ஷார்மிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருந்தது. காலை 10, 11 மணியளவில் அந்த சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே திட்டமிட்டு இருந்தது. எனினும் ரெயில்வே, மாநில அரசு, உள்ளூர் நிர்வாகம் இடையே சாியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் கடைசி நிமிடத்தில் தான் சிறப்பு ரெயில் குறித்த தகவல் தமிழர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. எனினும் எப்படியாவது சொந்த ஊர் திரும்ப வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் அவசர, அவசரமாக ரெயிலை பிடிக்க ரெயில் நிலையம் சென்றனர்.

ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அந்த ரெயில்கள் இயக்கப்படவில்லை. இந்தநிலையில் மாலை 5.30 மணியளவில் சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நெல்லைக்கு முதல் ஷார்மிக் ரெயில் புறப்பட்டு சென்றது.

சி.எஸ்.எம்.டி. - நெல்லை இடையே மற்றொரு ரெயில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் பயணிகள் பலர் மாலையில் புறப்பட்டு சென்று ரெயில் நிலையம் அருகில் உள்ள சாலைகளில் காத்து இருந்தனர். ஆனால் இரவு 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் நேற்று காலை 6.30 மணியளவில் தான் புறப்பட்டு சென்றது. இதனால் இரவு முழுவதும் பயணிகள் தண்ணீர், உணவு இன்றி சாலைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், பெண்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து சுரேஷ் என்ற பயணி கூறுகையில், ‘‘முதலில் காலை 11 மணிக்கு ரெயில் என்றாா்கள். பின்னர் இரவு 11.30 மணிக்கு என கூறினர். இதனால் உடைமைகளை எடுத்து கொண்டு மாலை 4 மணிக்கே ரெயில் நிலையம் வந்துவிட்டேன். ஆனால் அதிகாரிகள் ரெயில் நிலையத்துக்குள் விடவில்லை. வெளியில் சாலையில் காத்து இருந்தோம். ரெயில் தாமதமானது குறித்தும் முதலில் அவர்கள் எதுவும் கூறவில்லை. பின்னர் போதிய ரெயில் பெட்டிகள் இல்லை என கூறினர்.

இதனால் இரவு முழுவதும் போதிய தண்ணீர், உணவு இல்லாமல் சாலையிலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பலர் குழந்தைகளை வைத்து கொண்டு மிகவும் கஷ்டப்பட்டனர். பெண்கள் கழிவறை வசதி கூட இல்லாமல் தவித்தனர்.

அதிகாலையில் தான் ரெயில்நிலையத்துக்குள் செல்ல முடிந்தது. ஏற்கனவே கொரோனா பிரச்சினை ஊரடங்கால் வேலையிழந்து தவித்து போய் உள்ளோம். இதுதான் ரெயில்வே, அரசாங்கம் எங்கள் மீது காட்டும் அக்கறையா, ஆதரவா?. உண்மையில் அவமானப்படுத்தப்படுவது போல உணர்ந்தேன். ரெயில்வே, மாநில அரசுகள் செய்யும் அரசியலில் நாங்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளோம். நேற்று நடந்ததை பார்க்கும் போது எதுவுமே சரியாக திட்டமிடப்படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. இனிமேலாவது முறையாக திட்டமிட்டு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும்’’ என்றார்.

மாரியப்பன் என்ற பயணி கூறும்போது, ‘‘ரெயில் நிலையத்துக்கு வந்த பின் ரெயில்வே நிர்வாகம் எங்களை நன்றாக கவனித்து கொண்டது. எங்களுக்கு தேவையான தண்ணீர், உணவு வழங்கினர். ஆனால் இரவு முழுவதும் வெளியில் மிகவும் கஷ்டப்பட்டோம்’’ என்றார்.
Tags:    

Similar News