செய்திகள்
பிரதமர் மோடி

ஆயுஷ்மான் திட்டத்தால் ஒரு கோடி பேர் பயனடைந்துள்ளனர் -பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2020-05-20 21:42 GMT   |   Update On 2020-05-20 21:42 GMT
உலகின் மிகப்பெரிய அரசு சுகாதார காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 1 கோடி பேர் பயனடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு பெறு வகையில் கொண்டு வரப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டமே ஆயுஷ்மான் பாரத் திட்டம்.
 
உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமாக இந்த திட்டம் கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதாவது, 50 கோடி மக்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:

ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும். இரு ஆண்டுகளுக்குள் இந்த முயற்சி பல உயிர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்துப் பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்துகிறேன். அவர்களின் நல்ல ஆரோக்கியத்துக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் உடன் தொடர்புடைய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். அவர்களின் முயற்சிகளால் இது உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாக மாறியுள்ளது.

இந்த முயற்சி பல இந்தியர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது, குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிந்தவர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது.

பயனாளிகள் தாங்கள் பதிவுசெய்த இடத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உயர்தர மற்றும் மலிவான மருத்துவ சேவையைப் பெற முடியும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News