செய்திகள்
பலி - கோப்புப்படம்

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி பஸ் நிலையத்தில் பிணமாக மீட்பு

Published On 2020-05-18 09:26 GMT   |   Update On 2020-05-18 09:26 GMT
குஜராத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி பஸ் நிலையத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆமதாபாத்:

குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டத்தை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் உடல் நலக்குறைவால் அந்த மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் டானிலிம்டா தாலுகாவில் உள்ள ஒரு பஸ் நிலையத்தில் அவருடைய உடல் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேறொரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து முதியவரின் சட்டைப்பையில் இருந்த துண்டுச்சீட்டில் எழுதப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டு விவரத்தை கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் இறந்ததால், ஆஸ்பத்திரி நிர்வாகம் பஸ் நிலையத்தில் உடலை வீசியதாக குற்றம் சாட்டினர். மேலும் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னரே போலீசார் தங்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறினர்.

இது குறித்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு பணியில் இருந்த அதிகாரி கூறுகையில், ‘அந்த முதியவர் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தாலே போதும் என்பது தெரியவந்ததால், அவரிடம் இது குறித்து விளக்கினோம். அவரும் வீட்டுக்கு செல்வதாக கூறியதால் இங்கிருந்து அனுப்பினோம். பஸ்சில் ஏறிச் சென்ற அவர் எவ்வாறு பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்தார்’ என்பது தெரியவில்லை என்றார்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பற்றி கேள்விப்பட்ட முதல்-மந்திரி விஜய் ரூபானி, முன்னாள் முதன்மை செயலாளர் (சுகாதாரம்) ஜே.பி. குப்தாவை சிறப்பு அதிகாரியாக நியமித்து, இது தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News