செய்திகள்
கோப்பு படம்

சிறப்பு ரெயில்களில் எத்தனை பயணிகள் செல்லலாம்? புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரெயில்வே அறிவித்தது

Published On 2020-05-04 03:33 GMT   |   Update On 2020-05-04 03:33 GMT
சிறப்பு ரெயில்களில் பயணிகளை ஏற்றிச்செல்வது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது.
புதுடெல்லி:

ஊரடங்கின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகளை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பதற்காக ரெயில்வே அமைச்சகம் கடந்த 1-ந் தேதி முதல் சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. இதற்கான செலவை சம்பந்தப்பட்ட மாநிலங்களே ஏற்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* சிறப்பு ரெயில்கள் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாக தூரத்துக்கு இயக்கப்படுவதால், இடையில் எந்த இடத்திலும் நிற்காமல் செல்லும்.

* ஒரு ரெயிலில் சுமார் 1,200 பயணிகள் வரை பயணிக்கலாம். 90 சதவீதத்துக்கும் குறையாத அளவுக்கு அதில் பயணிகளை ஏற்றி அனுப்பவேண்டும்.

* இதற்கான டிக்கெட்டுகளை ரெயில்வே அச்சிட்டு மாநில அரசிடம் வழங்கும். மாநில அரசு அந்த டிக்கெட்டுகளை பயணம் செய்பவர்களிடம் கொடுத்து டிக்கெட் கட்டணத்தை வசூலித்து ரெயில்வேயிடம் வழங்க வேண்டும்.

* உரிய பரிசோதனைக்கு பின், பயணம் செய்வதற்கான டிக்கெட் வைத்திருப்பவர்களை மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.

* பயணிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவற்றை அவர்களை அனுப்பி வைக்கும் மாநில அரசுகளே வழங்கவேண்டும்.

* முக கவசம் வழங்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்துவதோடு, ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

* பயண நேரம் 12 மணி நேரத்துக்கும் மேல் நீட்டித்தால் ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படும்.

* பயணிகள் குறிப்பிட்ட இடத்தை சென்று அடைந்ததும் அந்த மாநில அரசு அதிகாரிகள் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தி தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களை அனுப்பிவைக்க வேண்டும்.

* இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டால் சிறப்பு ரெயில்கள் இயக்குவதை நிறுத்தி வைக்கும் உரிமை ரெயில்வே நிர்வாகத்துக்கு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News