செய்திகள்
வெந்நீர்

காபி போட்டு தர மறுத்ததால் ஆத்திரம்: மனைவி மீது வெந்நீரை ஊற்றிய தொழிலதிபர்

Published On 2020-04-23 08:28 GMT   |   Update On 2020-04-23 08:28 GMT
பெங்களூரில் காபி போட்டு தர மறுத்ததால் ஆத்திரமடைந்த தொழிலதிபர், மனைவி மீது வெந்நீர் ஊற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:

பெங்களூரு புறநகர் தொட்டப்பள்ளப்புரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபரின் மனைவி காவ்யா(வயது 34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). தற்போது ஊரடங்கால் தொழில் அதிபர் தனது குடும்பத்தினருடன் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளார். இந்தநிலையில் அவர் தனது மனைவி காவ்யாவிடம் காபி போட்டு தருமாறு கேட்டுள்ளார். ஆனால் காவ்யா, காபி போட்டு கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் சமையல் அறையில் இருந்த வெந்நீரை எடுத்து காவ்யா மீது ஊற்றினார்.

இதனை எதிர்பாராத காவ்யா, வெந்நீரின் சூட்டை தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் காவ்யாவை மீட்டு தொட்டப்பள்ளப்புரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக காவ்யா லேசான தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் காவ்யா பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் உள்ள சகாயவாணி பெண்கள் பாதுகாப்பு மையம் தலைவி ராணிஷெட்டியிடம் கணவர் மீது புகார் அளித்தார்.

அதன்பேரில் அவர் தொட்டப்பள்ளப்புரா போலீசை தொடர்பு கொண்டு காவ்யா கணவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
Tags:    

Similar News