செய்திகள்
மசூதியில் தங்கியிருந்தவர்கள் வெளியேறிய காட்சி

டெல்லி நிஜாமுதீன் கட்டிடத்தில் இருந்த 24 பேருக்கு கொரோனா பாதிப்பு- வழக்கு பதிவு செய்ய உத்தரவு

Published On 2020-03-31 08:32 GMT   |   Update On 2020-03-31 08:32 GMT
டெல்லி நிஜாமுதீன் மர்காஸ் கட்டிடத்தில் தங்கியிருந்தவர்களில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியின் நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்) கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றுள்ளது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். 

வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் அதிகமான வெளிநாட்டினரும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். 

அதன்பின்னர் இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, நிஜாமுதீன் மர்காஸ் கட்டிடத்தில் தங்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. 

மொத்தம் 1033 பேர் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் 334 பேர் மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும், 700 பேரை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் கூறியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் கடுமையான குற்றம் செய்திருப்பதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநருக்கு அரசு வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். அவர்கள் மீது வழக்குபதிவு செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறினார். அதன் அடிப்படையில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், நிஜாமுதீன் சம்பவம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், டெல்லி நிஜாமுதீன் மர்காஸ் கட்டிடத்தில் இருந்தவர்களில் இதுவரை 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்களில் 981 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 519 பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News