செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

ஊரடங்கு உத்தரவை மீறாமல் இருப்பது உண்மையான தேசப்பற்று: அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2020-03-30 15:57 GMT   |   Update On 2020-03-30 15:57 GMT
வீட்டிற்குள்ளே இருப்பதும், ஊரடங்கு உத்தரவை மீறாமல் இருப்பதும் உண்மையான தேசப்பற்று என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது, இன்றுடன் ஆறு நாட்கள் ஆகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுடைய எல்லைகளை மூடி மக்களை வீ்ட்டிற்குள்ளேயே இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதல் ஒன்றிரண்டு நாட்களில் பலர் வெளியே சென்றனர். அவர்களை கைது செய்தும், எச்சரித்தும் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தினர்.

இந்நிலையில்தான் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு வேலை செய்வதற்கான சென்ற கூலித் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர் கிளம்ப தொடங்கினார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத இரு மாநில அரசுகளும் அவர்களை கட்டுப்படுத்த திணறினர். இதனால் நூற்றுக்கணக்கான பேருந்துகளை ஏற்பாடு செய்து சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டனர். சிலர் கால்நடையாக நடந்து சொந்த ஊர் செல்லும் அவலம் நிலவி வருகிறது. இப்படி செல்பவர்கள் மயக்கம் அடைந்தும், விபத்தில் சிக்கியும் பலியாகின்றனர்.

தங்களுக்கு சாப்பாடு கிடைக்காதோ? என்ற அச்சத்தில்தான் அவர்கள் சொந்த ஊர் கிளம்புகிறார்கள். இதனால் மாநில எல்லைகளை அடைத்து அவர்களுக்கு உணவு, இருப்பிடத்தை அந்தந்த மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரேசன் பொருட்கள் கிடைக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மக்கள் வீட்டிலேயே தங்கியிருப்பதும், ஊரடங்கு உத்தரவை மீறாமல் இருப்பதும் உண்மையான தேசப்பற்று. இந்த நேரத்தில் வதந்திகள் பக்கம் கவனத்தை செலுத்த வேண்டாம். இந்த நேரத்தில் வீட்டிற்குள்ளேயே இருப்பதும் தேசப்பற்று செயல்தான். ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும். மக்களின் ரேசன் பொருட்களை டீலர்கள் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Tags:    

Similar News