செய்திகள்
போலீஸ் சூப்பிரண்ட்டுடன் சாஹ்ரிஷ் கன்வால்

மகாராஷ்டிரா: போலீஸ் டி.எஸ்.பி. ஆக பதவியேற்ற 14 வயது சிறுமி

Published On 2020-03-09 12:24 GMT   |   Update On 2020-03-09 12:24 GMT
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில் 14 வயது சிறுமி ‘ஒரு நாள்’ போலீஸ் டி.எஸ்.பி. ஆக பதவியேற்று பணிகளை மேற்பார்வையிட்டார்.
மும்பை:

உலக நாடுகள் அனைத்தும் நேற்று சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடிய வேளையில் மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில் 14 வயது சிறுமி நேற்று ‘ஒரு நாள்’  மட்டும் போலீஸ் டி.எஸ்.பி. ஆக பதவியேற்று காவல் துறையினரின் பணிகளை மேற்பார்வையிட்டார்.

புல்தானா மாவட்டம், மல்காபூர் தாலுகாவில் உள்ள ஜில்லா பரிஷத் உருது உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியான சாஹ்ரிஷ் கன்வால்(14) என்ற அந்தச் சிறுமியை அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு போலீஸ் சூப்பிரண்ட் காரில் அழைத்து வந்தார்.



அலுவலக வளாகத்தில் சாஹ்ரிஷ் கன்வாலுக்கு காவல்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் முறைப்படி மரியாதை செலுத்தி வரவேற்றனர். சூப்பிரண்ட் அவர்களை சாஹ்ரிஷ் கன்வாலுக்கு அறிமுகம் செய்வித்தார்.

பின்னர், சூப்பிரண்ட் அலுவலக அறைக்கு சென்ற அவருக்கு மலர்க்கொத்து அளித்து தனது இருக்கையில் அமரச் செய்தார்.



அங்கிருந்தவாறு காவல்துறையின் அன்றாட செயல்பாடுகளை கண்காணித்த சாஹ்ரிஷ் கன்வால், ‘பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிக்கவும் அனைத்து பெண்களும் தற்சார்பு மிக்கவர்களாக மிளிரவும் பாடுபடுவேன்’ என்று உறுதியேற்றுக் கொண்டார்.

Tags:    

Similar News