செய்திகள்
உச்சநீதிமன்றம் (கோப்பு படம்)

சபரிமலை வழக்கு முடிந்த பின்னரே சிஏஏ வழக்குகள் விசாரணை - உச்சநீதிமன்றம்

Published On 2020-03-05 08:39 GMT   |   Update On 2020-03-05 10:48 GMT
சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டு தளங்களில் பெண்கள் செல்ல அனுமதி வழங்குவது தொடர்பாக நடைபெற்றுவரும் வழக்குகளின் வாதப்பிரதி வாதங்கள் முடிந்த பின்னரே சிஏஏ குறித்து விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புது டெல்லி:

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதற்கிடையில், சிஏஏ சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கபில் சிபல், சிஏஏ தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, சிஏஏ விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் பதில் அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவித்தது.

அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், சிஏஏ விவகாரத்தில் பதில் அறிக்கை இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படும் என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதியை உள்ளடக்கிய அமர்வு,  'சபரிமலை மற்றும் மசூதி உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்குள் பெண்கள் செல்ல அனுமதி வழங்குவது தொடர்பான வழக்குகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வழக்குகளின் வாதப்பிரதி வாதங்கள் நிறைவு பெற்ற பின்னரே சிஏஏ தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும்’ என்று தெரிவித்து வழக்கை தள்ளிவைத்தனர்.
Tags:    

Similar News