செய்திகள்
பாலியல் பலாத்காரம்

ரெயில் நிலையங்கள், ரெயில்களில் 3 ஆண்டுகளில் 165 பெண்கள் கற்பழிப்பு

Published On 2020-03-02 03:14 GMT   |   Update On 2020-03-02 03:14 GMT
கடந்த 2017 முதல் 2019 வரை 3 ஆண்டுகளில் ரெயில் நிலையம் மற்றும் வளாகங்களில் 136 பெண்களும், ஓடும் ரெயிலில் 29 பெண்களும் என மொத்தம் 165 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

ரெயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரெயில்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2017 முதல் 2019 வரை 3 ஆண்டுகளில் ரெயில் நிலையம் மற்றும் வளாகங்களில் 136 பெண்களும், ஓடும் ரெயிலில் 29 பெண்களும் என மொத்தம் 165 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளில் கற்பழிப்பை தவிர்த்து பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் மொத்தம் 1672 பதிவாகி உள்ளது. இதில் ரெயில் நிலையங்களில் நடந்த குற்றங்கள் தொடர்பாக 802 வழக்குகளும், ஓடும் ரெயிலில் நடந்த குற்றங்கள் தொடர்பாக 871 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

அதேபோன்று கடந்த 3 ஆண்டுகளில் 771 கடத்தல் வழக்குகளும், 4,718 வழிப்பறி வழக்குகளும், 213 கொலை முயற்சி வழக்குகளும் பதிவாகி உள்ளது. ரெயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரெயில்கள் என மொத்தம் 542 கொலைகள் நடந்து உள்ளது. ரெயில் நிலைய வளாகங்கள், ஓடும் ரெயில்களில் நடக்கும் குற்றங்களை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது வழக்கை நடத்துவது போன்றவை அனைத்தும் மாநில அரசு மற்றும் மாநில அரசின் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரத்துக்குட்பட்டது ஆகும்.

ரெயில்வே துறையும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இதர குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News