செய்திகள்
கோப்புப்படம்

டெல்லி வன்முறை: பள்ளிகளுக்கு மார்ச் 7 வரை விடுமுறை

Published On 2020-02-29 15:48 GMT   |   Update On 2020-02-29 15:48 GMT
டெல்லி வன்முறை காரணமாக வடகிழக்கு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 7-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்துவரும் நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23-ம் தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. அதில் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது.

சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தலைமை காவலர் மற்றும் உளவு பிரிவு அதிகாரி உள்பட பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. வன்முறையில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர், சிகிச்சை பலனளிக்காமல் ஆஸ்பத்திரிகளில் மரணமடைந்துள்ளனர். இதனால் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. 

இதற்கிடையே, வன்முறை பாதித்த பகுதிகளில் இன்று கடைகள் மற்றும் பிற நிறுவனங்கள் திறக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் இயல்பு நிலை மெல்ல மெல்ல  திரும்பி வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேலைக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர். ஏராளமானோா் தங்களது அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், வன்முறை நடத்தப்பட்ட வடகிழக்கு டெல்லியில் மார்ச் 7-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தலைநகர் டெல்லியில் வரும் மார்ச் 2-ம் தேதி திட்டமிட்டபடி 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது. மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்து, அனைத்து உதவிகளையும் அளிக்க காவல்துறை மற்றும் அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags:    

Similar News