செய்திகள்
டெல்லியில் நடைபெற்ற வன்முறை

டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை 106 பேர் கைது

Published On 2020-02-26 20:46 GMT   |   Update On 2020-02-26 20:46 GMT
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வன்முறை தொடர்பாக இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 

கடந்த 24-ம் தேதி மற்றும் அதற்கு மறுநாள் என இரண்டு தினங்கள் நடந்த மோதல்களில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். 

காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகளும் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
 
இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர் ரத்தன் லால் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் போலீசார் குவிக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி போலீஸ் கூடுதல் ஆணையர் மந்தீப் சிங் ரந்தாவா கூறுகையில், ''வடகிழக்கு டெல்லியில் நேற்று எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. கடந்த தினங்களில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களில் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News