செய்திகள்
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள்.

2000 ரூபாய் நோட்டு மெல்ல, மெல்ல விலகுகிறது

Published On 2020-02-26 04:55 GMT   |   Update On 2020-02-26 04:55 GMT
முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை சிலர் 2000 ரூபாய் நோட்டுகளாக எளிதில் பதுக்க வாய்ப்பு உள்ளதால் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தை படிப்படியாக குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
மும்பை:

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டன. இதற்குப் பதிலாக புதிய 2000, 500, 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.

காகித பண புழக்கத்தை குறைப்பதற்காக, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கிடையே முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை சிலர் 2000 ரூபாய் நோட்டுகளாக எளிதில் பதுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தை படிப்படியாக குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. அரசு, தனியார் வங்கிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த மையங்கள் மூலம் பொதுமக்கள் எளிதாக பணத்தை எடுத்துச் செல்கின்றனர்.

எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் எந்த ஏ.டி.எம் மெஷினிலும் பணம் எடுக்கலாம். 2000 ரூபாய் நோட்டு அறிமுகமானதும் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மக்கள் பெறும் வகையில் ஏ.டி.எம். எந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதனால் மக்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு தாராளமாக புழங்கியது.

ஏ.டி.எம். எந்திரங்களில் 2000 ரூபாய் நோட்டுகளுடன் புதிய 500, 200 ரூபாய் நோட்டுகளும் கிடைத்து வந்தன. ரிசர்வ் வங்கியின் அறிவுரைப்படி முதல் கட்டமாக தனியார் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டு வினியோகம் படிப்படியாக குறைக்கப்பட்டன. தற்போது பெரும்பாலான தனியார் வங்கி ஏ.டி.எம்.களில் புதிய 500 ரூபாய் நோட்டுக்களே வைக்கப்படுகின்றன. 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாக நிறுத்தப்பட்டுவிட்டன.



தற்போது அரசு வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகள் வைப்பதை குறைத்துவிட்டனர். அரசு ஏ.டி.எம். மையங்களிலும் 500 ரூபாய் நோட்டுகளே வருகின்றன. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளிலும், ஏ.டி.எம். எந்திரங்கள் மூலமும் பொதுமக்கள் தங்கள் கணக்குகளில் டெபாசிட் செய்ய எந்தவித தடையும் இல்லை.

என்றாலும், 50 சதவீதத்துக்கும் அதிகமான ஏ.டி.எம். மையங்களில் 2000 ரூபாய் நோட்டு வைப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. அனைத்து ஏ.டி.எம். எந்திரங்களிலும் 2000 ரூபாய் நோட்டு வினியோகத்தை நிறுத்தும் வகையில் ஏ.டி.எம். எந்திரங்களில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே ஏ.டி.எம். மையங்களில் இனி 2000 ரூபாய் நோட்டுகள் அதிகம் கிடைக்காது.

ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படி ஏ.டி.எம். எந்திரங்களில் 2000 ரூபாய் நோட்டு வைப்பது நிறுத்தப்பட்டு வருகிறது. தற்போது 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News