செய்திகள்
ஜாப்ராபாத் மெட்ரோ ரெயில் நிலையம்

டெல்லியில் வன்முறை தணிந்தது- மெட்ரோ ரெயில் நிலையங்கள் திறப்பு

Published On 2020-02-26 03:47 GMT   |   Update On 2020-02-26 03:47 GMT
டெல்லியில் போராட்டக்காரர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை இன்று தணிந்துள்ள நிலையில், மூடப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் திறக்கப்பட்டு வழக்கமான சேவை தொடங்கி உள்ளது.
புதுடெல்லி:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே நேற்றுவரை நடந்த மோதல்களில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகளும் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 
 
இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர் ரத்தன் லால் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 150 பேர் படுகாயமடைந்துள்ளனர். பதற்றம் அதிகரித்ததால் மத்திய மற்றும் வடகிழக்கு டெல்லியில் மார்ச் மாதம் 24-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டெல்லி வன்முறை தொடர்பாகவும், அதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறி வழக்கறிஞர் ஒருவர் டெல்லி ஐகோர்ட் நீதிபதியிடம் நேற்று இரவு மனு அளித்தார். இந்த மனுவை நள்ளிரவில் நீதிபதி முரளிதர், நீதிபதி அனுப் பாம்பானி ஆகியோர் கொண்ட அமர்வு அவசர வழக்காக விசாரித்தது. 

நீதிபதி முரளிதர் வீட்டில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது, காயமடைந்தவர்களை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லவும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதையும் உறுதி செய்யுமாறு காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்காக டெல்லி காவல்துறை தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம் என்றும் கூறினர். மனுதாரர் குறிப்பிட்டிருந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவரை நீதிபதி முரளிதர் தொடர்பு கொண்டு விசாரித்தார். இந்த வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.



நீதிபதிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்ட அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறினர். இன்று காலையில் யாரும் அப்பகுதியில் போராட்டம் நடத்த வரவில்லை. மற்ற இடங்களிலும் வன்முறையோ, தீ வைப்பு சம்பவமோ நடந்ததாக தகவல் வெளியாகவில்லை.

குறிப்பாக ஜாப்ராபாத் மெட்ரோ ரெயில் நிலையம், மாஜ்பூர் சதுக்கம், பதா சாலை, மாஜ்பூர், சீலம்பூர், கோகுல்புரி உள்ளிட்ட பகுதிகள் ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாம் வெறிசோடி காணப்பட்டது. போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, மெட்ரோ ரெயில் நிலையங்கள் இன்று காலை திறக்கப்பட்டு, வழக்கமான சேவை தொடங்கியது.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் துணை கமிஷனரும் சென்று, நிலைமையை எடுத்துக் கூறினார்.
Tags:    

Similar News