செய்திகள்
காஷ்மீர் நெடுஞ்சாலை

காஷ்மீர் நெடுஞ்சாலையில் கிடந்த மர்ம பை- 3 மணி நேரம் போக்குவரத்து ரத்து

Published On 2020-02-25 10:56 GMT   |   Update On 2020-02-25 10:56 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கேட்பாரற்று கிடந்த மர்ம பையினால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. 

இந்த நடவடிக்கையின் போது அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இணையதளம் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும், ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டுவந்த அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. 

பதற்றமான சூழ்நிலை நிலவி வந்த காஷ்மீரில் தற்போது நிலைமை சீராக தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் எல்லைப்பகுதிகளில் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவமும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. எல்லைப்பகுதிகளிலும், முக்கிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு செல்லும் நெடுஞ்சாலையில் கேட்பாரற்று கிடந்த மர்ம பையினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

ரம்பான் மாவட்ட பகுதி நெடுஞ்சாலையில் கிடந்த இந்த மர்ம பையை கண்டு பொதுமக்கள் அனைவரும் அச்சமடைந்தனர். வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இது குறித்து ராணுவத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம பையை சாலையில் இருந்து அகற்றினர். அந்த பைக்குள் சில மது பாட்டில்கள் மட்டும் இருந்தன. இதனால் மக்களிடையே ஏற்பட்ட பீதி தணிந்தது.

சாலையில் கிடந்த மர்ம பையினால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News