செய்திகள்
ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்டில் பெண்கள்- குழந்தைகளுக்கு இலவச பஸ்: ஹேமந்த் சோரன்

Published On 2020-02-23 08:38 GMT   |   Update On 2020-02-23 08:38 GMT
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்தை இலவசமாக வழங்க முதல்வர் ஹேமந்த் சோரன் முடிவு செய்துள்ளார்.

ராஞ்சி:

சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவால் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.

இதற்கு அவர் அறிவித்த பெண்களுக்கு இலவச மெட்ரோ ரெயில் - பஸ் பயணம், குடிநீர் உள்ளிட்ட திட்டங்கள் காரணமாக இருந்தது என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து ஜார்க்கண்டில் இலவச திட்டங்களை அறிவிக்க அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் முடிவு செய்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

அவரது அரசு அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தில் 300 யூனிட்டுக்கு மேல் தாண்டினால் சாதாரண கட்டணத்தை விட இரண்டு மடங்கு வசூலிக்கப்படும். இதன் மூலம் மின்சாரத்தை சிக்கனப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள்.

அதேபோல் பெண்கள்-குழந்தைகளுக்கு பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்தை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

பின்னர் இந்த இலவச போக்குவரத்து பயணம் முதியவர்களுக்கும் நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளான விவசாய கடன் தள்ளுபடி, வேலை இல்லா இளைஞர்களுக்கு சிறப்பு அறிவிப்புகள், டெல்லியில் உள்ளது போல பொது பள்ளிகள் ஆரம்பிப்பது ஆகிய திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லி அரசு நடத்தும் பொது பள்ளியை ஜார்க்கண்டில் ஆரம்பிப்பது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜெகர்நாத் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்று அங்குள்ள பொது பள்ளிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

Tags:    

Similar News