செய்திகள்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா

வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பிரிவு 371-ஐ ரத்துசெய்யும் எண்ணம் இல்லை - மத்திய மந்திரி அமித்ஷா

Published On 2020-02-20 20:11 GMT   |   Update On 2020-02-20 20:11 GMT
வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பிரிவு 371-ஐ ரத்துசெய்யும் எண்ணம் இல்லை என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இடாநகர்:

வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள பல மாநிலங்களில் அரசியல்சாசனத்தின் 371-வது சட்டப்பிரிவின் கீழ் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் உள்ள கலாசாரம், பாரம்பரியம் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டங்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு இந்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அருணாசலபிரதேச மாநிலத்தின் 34-வது ஆண்டு நிறுவன நாள் விழா நேற்று இடாநகரில் நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த பிராந்தியத்தை நாட்டின் பிறபகுதிகளுடன் இணைக்கும் உண்மையான உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சி 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி அரசில்தான் நடைபெற்றது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல்சாசனத்தின் 370-வது சட்டப்பிரிவு ரத்துசெய்யப்பட்ட பின்னர், அதேபோல அடுத்து 371-வது சட்டப்பிரிவும் ரத்துசெய்யப்படும் என்று தவறான தகவல் பரவியது. இது ஒருபோதும் நடக்காது. இதுபோன்ற எண்ணம் யாருக்கும் இல்லை. இந்த பிராந்தியத்தில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டது. சமீபத்தில் போடோ அமைதி ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இதுதவிர மணிப்பூரில் காலவரையற்று நடைபெற்றுவந்த போராட்டமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் ஓட்டு கேட்டு இங்கு வரும்போது, வடகிழக்கு பிராந்தியம் பயங்கரவாதம், உள்ளூர் கலவரங்கள், எல்லைதாண்டிய பிரச்சினைகள் ஆகியவை இல்லாத பகுதியாக இருக்கும்.

வடகிழக்கு பிராந்தியத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் பிரதமர் மோடியின் உறுதியை நிறைவேற்றுவதற்காக, அவர் 5 ஆண்டுகளில் இந்த பிராந்தியத்துக்கு 30 முறை வந்திருக்கிறார். இந்த பிராந்தியத்துக்கு காங்கிரஸ் ஆட்சியின்போது 13-வது நிதிக்கமிஷனில் ரூ.89,168 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் மோடி அரசில் 14-வது நிதிக்கமிஷனில் ரூ.3 லட்சத்து, 13 ஆயிரத்து 374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News