செய்திகள்
கோப்பு படம்

சபரிமலை கோவில் நகை பட்டியல் தயார் செய்ய நீதிபதி தலைமையில் குழு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2020-02-07 23:58 GMT   |   Update On 2020-02-07 23:58 GMT
சபரிமலை ஐய்யப்பன் கோவில் நகைகளின் பட்டியல் தயார் செய்ய நீதிபதி தலைமையில் குழு அமைத்து சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.
புதுடெல்லி:

கேரள மாநிலம் பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில், ‘சபரிமலை கோவிலுக்கென தனிச்சட்டத்தை உருவாக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுவை கடந்த 5-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பந்தளம் அரச குடும்பத்தினர் தங்கள் வசம் உள்ள சபரிமலை கோவில் நகைகளை ஏன் கேரள அரசிடம் ஒப்படைக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பியது. மேலும் நகைகளை ஒப்படைப்பது குறித்து அரச குடும்பம் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. இதில் கேரள அரசு தரப்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதிட்டார்.

அவர் தனது வாதத்தில், ‘சபரிமலை அய்யப்பனுக்கு சொந்தமான நகைகள் குறித்து உடனடியாக பட்டியல் தயாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே ஒரு குழுவை அமைத்து அந்த குழுவில் நகைத்தொழிலாளர் ஒருவரின் உதவியுடன் இவற்றை மதிப்பிட வேண்டும். இதனால் வருங்காலத்தில் யாரும் போலி நகைகளை மாற்றி வைக்க முடியாது’ என்று வலியுறுத்தினார்.

இதற்கு பந்தளம் அரச குடும்பத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் ‘கேரள ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் தலைமையிலான ஒரு குழு இந்த நகைகள் தொடர்பாக விரிவான பட்டியல் ஒன்றை தயார் செய்து ‘சீல்’ வைத்த உறையில் ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கை 4 மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News