செய்திகள்
ஆம்ஆத்மி- காங்கிரஸ்- பாஜக

டெல்லியில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது- சனிக்கிழமை ஓட்டுப்பதிவு

Published On 2020-02-06 11:32 GMT   |   Update On 2020-02-06 11:32 GMT
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. வருகிற 8-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
புதுடெல்லி:

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

அந்த ஆட்சியின் 5 ஆண்டு பதவி காலம் இந்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து வருகிற 8-ந்தேதி டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலில் கடந்த 2015-ம் ஆண்டு போலவே இந்த தடவையும் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் ஆம்ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியை பிடிக்க வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளன.

மொத்தம் உள்ள 70 இடங்களில் 36 இடங்களை கைப்பற்றும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும். கடந்த தேர்தலின்போது ஆம்ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்த தடவையும் ஆம்ஆத்மி கட்சி 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த கட்சிக்கு 2015-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்கு சதவீதம் குறையும் என்று தெரிய வந்தாலும் கெஜ்ரிவால்தான் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கருத்து கணிப்புகள் கூறி உள்ளன.

இதையடுத்து ஆம்ஆத்மியின் சவாலை சமாளிக்க பாரதிய ஜனதா தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டது. பல்வேறு புதிய அறிவிப்புகளையும் பாரதிய ஜனதா வெளியிட்டது. இதனால் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதாவுக்கும், ஆம்ஆத்மிக்கும் நேரடி போட்டி உருவாகி இருக்கிறது.

டெல்லியில் உள்ள 70 தொகுதிகளிலும் கடந்த 2 வாரமாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. கடந்த 2 நாட்களாக ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் என்று டெல்லியில் திரும்பிய திசையெல்லாம் தேர்தல் திருவிழா களை கட்டி உள்ளது.


பிரதமர் மோடி 2 தடவை டெல்லியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். உள்துறை மந்திரி அமித்ஷா 70 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்துள்ளார்.

ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் 70 தொகுதிகளுக்கும் தலா 2 தடவை சென்று பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி உள்ளார். இதனால் பிரசார களத்தில் ஆம்ஆத்மி முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரத்தில் மிகவும் பின் தங்கி விட்டனர்.

இந்த நிலையில் டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. இதனால் டெல்லி முழுவதும் இன்று காலை முதல் உச்சக்கட்ட பிரசாரம் நடைபெற்றது.

ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் அடுத்தடுத்து டுவிட்டர் தகவல்களை வெளியிட்டு இன்று ஆதரவு திரட்டினார். மத்திய மந்திரிகள் இன்று காலை டெல்லியில் பல்வேறு குடியிருப்புகளுக்கும் சென்று பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார்கள்.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று டெல்லியில் 2 பிரமாண்ட ஊர்வலங்களை நடத்தினார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பகல் 11 மணிக்கு ரோடு ஷோ நடத்தினார். சீமாபுரி, ஹரி நகர், மடிப்பூர் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கும் அவர் ரோடு ஷோவாக சென்று ஆதரவு திரட்டினார். இன்று பிற்பகல் 2 மணிக்கு அவர் ஹரிநகர் தொகுதியில் தனது பிரசாரத்தை முடித்தார்.
Tags:    

Similar News