செய்திகள்
ஸ்பீக்கர், லிப்ஸ்டிக் போன்றவற்றிற்குள் மறைத்து கடத்தப்பட்ட தங்க கட்டிகளை படத்தில் காணலாம்.

கேரளா விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2020-02-03 04:53 GMT   |   Update On 2020-02-03 04:53 GMT
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் ஒரேநாளில் ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்:

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் தங்க கட்டிகள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கஇலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். விமானத்தில் வரும் பயணிகளில் சிலர் நூதன முறையில் தங்க கட்டிகளை கடத்தி வருவதால் அவர்களை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீப காலமாக கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வருபவர்கள் பிடிபடும் சம்பவம் அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 945 கிராம் தங்கம் சிக்கியது.

இதனால் கரிப்பூர் விமான நிலையத்தில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று ஒரேநாளில் ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பு உள்ள கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கரிப்பூர் விமான நிலையத்திற்கு ரியாத்தில் இருந்து வந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்த போது கோழிக்கோடை சேர்ந்த ஜாபர் என்ற பயணி மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் கொண்டுவந்த பை உள்பட உடமைகளை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது அவர் தனது பைக்குள் சில ஸ்பீக்கர்களை வைத்திருந்தது தெரியவந்தது.

அந்த ஸ்பீக்கர்கள் அதிக எடையுடன் காணப்பட்டதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதை சோதனை செய்தனர். அப்போது ஸ்பீக்கருக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 2½ கிலோ தங்க கட்டிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ஜாபரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அதேப்போல துபாயில் இருந்து கரிப்பூர் விமான நிலையம் வந்த மற்றொறு விமானத்தில் பயணம் செய்த கர்நாடகத்தை சேர்ந்த ஹப்பீக் என்ற பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் லிப்ஸ்டிக் உள்பட அழகுசாதன பொருட்களை பையில் கொண்டுவந்தது தெரிய வந்தது.

சந்தேகத்தின் பேரில் அதை அதிகாரிகள் சோதனை செய்தபோது 140 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். அதே விமானத்தில் வந்த கர்நாடகாவை சேர்ந்த முகமது என்பவர் அழகு சாதன பொருட்களுக்குள் 210 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தியது தெரிய வந்தது. அவரும் சுங்க இலாகா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News