செய்திகள்
சசிகலா புஷ்பா

அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா பாரதீய ஜனதாவில் இணைந்தார்

Published On 2020-02-02 23:31 GMT   |   Update On 2020-02-02 23:31 GMT
2014-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சசிகலா புஷ்பா திடீரென தன்னை பாரதீய ஜனதாவில் இணைத்துக் கொண்டார்.
புதுடெல்லி:

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனவர் சசிகலா புஷ்பா. அப்போது இவர் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்தார். கட்சியிலும் மாநில மகளிரணி பொறுப்பை வகித்தார்.

இந்த நிலையில் 2016-ம் ஆண்டு கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து சசிகலா புஷ்பா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் அ.தி.மு.க. எம்.பி.யாகவே நீடித்து வந்தார். அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து சசிகலா புஷ்பா அ.ம.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார். அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 1-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் சசிகலா புஷ்பா நேற்று திடீரென தன்னை பாரதீய ஜனதாவில் இணைத்துக் கொண்டார். டெல்லியில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் அவர் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். முரளிதர ராவ், சசிகலா புஷ்பாவுக்கு சால்வை அணிவித்து, உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார்.
Tags:    

Similar News