செய்திகள்
திருப்பதி உண்டியல் பணத்தை எண்ணும் ஊழியர்கள்

திருப்பதி உண்டியலில் வசூலான 80 டன் சில்லரை நாணயங்களை உருக்க முடிவு

Published On 2020-01-29 05:40 GMT   |   Update On 2020-01-29 05:40 GMT
சில்லரை நாணயங்களை உருக்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்த நிலையில், 80 டன் நாணயங்களில் முதல் கட்டமாக 40 டன் நாணயங்களை தனியார் நிறுவனத்திடம் வழங்க தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

பக்தர்கள் செலுத்தக்கூடிய உண்டியல் காணிக்கை மூலம் தினந்தோறும் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வசூலாகிறது.

பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் சில்லரை நாணயங்களின் 25 பைசாவிற்கு கீழுள்ள நாணயங்களை 2011-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி ரத்து செய்த நிலையில் இதனை மாற்றுவதற்கு கால அவகாசம் வழங்கியும் அப்போது இருந்த தேவஸ்தான அதிகாரிகள் அதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.



தொடர்ந்து 2014-ம் ஆண்டு பயன்படுத்தாத நாணயங்களை மாற்றுவதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றதால் மாற்ற முடியாது என பல வங்கிகள் முன்வரவில்லை.

இந்நிலையில் தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி ரிசர்வ் வங்கியின் ஆலோசனைப்படி தங்கம், வெள்ளி, செம்பு என பல்வேறு நாணயங்களை 2600 பிரிவுகளாக பிரித்தார்.

இதில் 25 பைசாவிற்கு கீழுள்ள பயன்படுத்தாத நாணயங்கள் மட்டும் 80 டன் உள்ளது. இந்த 80 டன் நாணயங்களை பாதுகாப்பது தேவஸ்தானத்திற்கு நாளுக்கு நாள் சிக்கலாக மாறி வருகிறது.

இந்நிலையில் இதனை உருக்குவதற்கு ரிசர்வ் வங்கியிடம் தேவஸ்தானம் அனுமதி கேட்டது. இதையடுத்து ரிசர்வ் வங்கி அனுமதி அளித்த நிலையில் சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒரு டன் நாணயம் ரூ.30 ஆயிரத்திற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு 80 டன் நாணயங்களில் முதல் கட்டமாக 40 டன் நாணயங்களை வாகனத்தில் ஏற்றி தனியார் நிறுவனத்திடம் வழங்க தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Tags:    

Similar News