செய்திகள்
பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி

பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்

Published On 2020-01-28 06:42 GMT   |   Update On 2020-01-28 06:42 GMT
2020-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரி குறித்த சுவாரசிய தகவலை பார்க்கலாம்.
பெங்களூரு:

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த 25-ந்தேதி அறிவித்தது.

7 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 16 பேருக்கு பத்ம பூஷண், 118 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 141 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரபலமில்லாத, சாதனை புரிந்தவர்களின் பெயர்கள் இருந்தன. அவர்களில் ஒருவர் கர்நாடக மாநிலம் தட்சிணா கன்னடா பகுதியை சேர்ந்தவர் வரரேகலா ஹஜப்பா என்பவர் ஆவார்.

இவர் சாதாரண பழ வியாபாரி ஆவார். படிக்கும் வாய்ப்பை இழந்த இவர் பள்ளிக்கூடமே இல்லாத தனது கிராமத்தில் உள்ள குழந்தைகள், படிக்கும் வாய்ப்பை இழக்க கூடாது என கருதினார். இதற்காகத்தான் தெரு, தெருவாக சென்று ஆரஞ்சு பழங்கள் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் ஒரு பள்ளிக்கு நிலத்தை வாங்கினார்.

2000-ம் ஆண்டில்தான் முதல் முறையாக அந்த கிராமத்தில் ஹஜப்பாவின் முயற்சியால் பள்ளி அமைக்கப்பட்டது. இதில் பல ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். தொடர்ந்து ஏழை குழந்தைகளின் படிப்புக்கு இவர் உதவி வருகிறார். ஏழ்மையான நிலையிலும் இவர் செய்துவரும் சேவையை பாராட்டி மத்திய அரசு ஹஜப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி உள்ளது.

ஹஜப்பா ஒரு முறை ஆரஞ்சு பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி இவரிடம் பழத்தின் விலையை கேட்டுள்ளனர். இவருக்கு மொழி தெரியாததால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த தம்பதி இவரிடம் பழம் வாங்காமல் சென்றுவிட்டனர்.

அப்போது முதல் தனது கிராமத்து குழந்தைகள் படித்து முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் கல்விக்கு உதவி வருவதாக ஹஜப்பா கூறினார். இவர் பள்ளி ஆசிரியர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான குடிநீரை காய்ச்சி தரும் வேலை மற்றும் வகுப்பறைகளை சத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.



கடந்த 25-ந்தேதி ரேசன் கடையில் வரிசையில் ஹஜப்பா நின்றபோது அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பதை அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். முதலில் அவர் இதை நம்பவில்லை. பின்னர் அதிகாரிகள் விருது அறிவிக்கப்பட்டதை எடுத்துக் கூறியதும் மகிழ்ச்சியடைந்த அவர் என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கும் நாட்டின் உயரிய விருதுகள் தேடி வருவது சந்தோஷமாக இருப்பதாக ஆனந்த கண்ணீர் வடித்தார்.

Tags:    

Similar News