செய்திகள்
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்

பிப்ரவரி 1-ல் தண்டனை நிறைவேறுமா? -குற்றவாளி முகேஷின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையீடு

Published On 2020-01-27 10:13 GMT   |   Update On 2020-01-27 10:48 GMT
நிர்பயா வழக்கில் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து முகேஷ் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி முறையிடப்பட்டது.
புதுடெல்லி:

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் (வயது 32), தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். 

முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி கடந்த 17-ம் தேதி நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி இந்த மனுவை, அவரது வழக்கறிஞர் விருந்தா குரோவர் தாக்கல் செய்தார். 



இந்த நிலையில் முகேஷ் சிங்கின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று, அவரது சார்பில் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது.

இந்த முறையீட்டை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ‘ஒருவர் தூக்கிலிடப்பட உள்ளார் என்றால் அதை விட அவசர வழக்கு வேறு ஏதுவும் இல்லை. தூக்கிலிடப்படும் குற்றவாளிகளின் மனுக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.எனவே வழக்கை பட்டியலிடுவது தொடர்பாக பதிவாளரிடம் சென்று முறையிடுங்கள்’ என்று வக்கீலிடம் அறிவுறுத்தினார். 

இவ்வாறு அடுத்தடுத்து புதிய வழக்குகள் தொடரப்படுவதால், குற்றவாளிகளுக்கு 1-ம் தேதி தண்டனை நிறைவேற்றப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது.
Tags:    

Similar News