செய்திகள்
காங்கிரஸ் எம்எல்ஏ ஹாரிஸ் - ஆஸ்பத்திரி முன்பு போலீசார்

பெங்களூருவில் மர்ம பொருள் வெடித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. காயம்

Published On 2020-01-23 04:34 GMT   |   Update On 2020-01-23 04:34 GMT
பெங்களூருவில் மர்ம பொருள் வெடித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். தொடர்ந்து விவேக் நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:

பெங்களூரு சாந்தி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹாரிஸ். நேற்று இரவு சாந்தி நகர் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா மேடையில் அமர்ந்திருந்த ஹாரிசின் அருகே ஒரு மர்ம பொருள் விழுந்து வெடித்தது. இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது உதவியாளர் மோகன் மற்றும் 3 பெண்கள், 2 ஆண்கள் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.

அவர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சம்பவ இடத்திற்கு பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமி‌ஷனர் சேத்தன்சிங் ரத்தோர் நேரில் வந்து விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் வெடித்து சிதறிய மர்ம பொருளின் சிதறல்களை சேகரித்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பி உள்ளனர். ஆய்வுக்கு பிறகுதான் அது வெடிகுண்டா? என்பது தெரியவரும். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது.



போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அந்த பகுதியில் சிலர் வெடி வெடித்தபோது அதில் ஒரு வெடி பறந்துவந்து மேடையில் விழுந்ததால் எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் காயம் அடைந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விவேக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஹாரீஸ் எம்.எல்.ஏவின் மகன் நலபட் தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்து தந்தையின் உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது தந்தை அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே பச்சை நிறத்தில் பிளாஸ்டிக் பொருள் ஒன்று விழுந்து வெடித்தது. யாரோ வேண்டுமென்றே என் தந்தை மீது தாக்குதல் நடத்துவதற்காக மர்ம பொருளை வீசி உள்ளார்கள். அவர்கள் யார்? எதற்காக மர்ம பொருளை வீசினார்கள் என்று தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து உண்மையான விவரம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணையில் தான் தெரியவரும். அந்த தாக்குதலில் என் தந்தைக்கு காலில் மட்டும் காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். அவர் ஆஸ்பத்திரியில் நலமாக உள்ளார். இந்த சம்பவத்தால் அவரது ஆதரவாளர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு சிக்கியது. இதுதொடர்பாக ஆதித்யராவ் என்பவர் நேற்று போலீசில் சரண் அடைந்தார். அவரை மங்களூரு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிறந்த நாள் விழாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குண்டுவெடித்தது படுகாயம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நாச வேலையில் ஈடுபட நிறைய பேர் பதுங்கி இருப்பதாக மதசார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

Tags:    

Similar News