செய்திகள்
புட்டு கடலை கறி

உணவு பட்டியலில் இருந்து புட்டு, கடலை கறி நீக்கிய ரெயில்வே - போராட்டத்துக்கு பின் மீண்டும் சேர்ப்பு

Published On 2020-01-22 11:23 GMT   |   Update On 2020-01-22 12:31 GMT
இந்திய ரெயில்வே உணவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட புட்டு, கடலை கறி உள்ளிட்ட கேரள உணவுகள் போராட்டங்களுக்கு பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டது.
கொச்சி:

கேரள மக்களின் பாரம்பரிய உணவுகளான புட்டு, கடலை கறி, முட்டை கறி, அப்பம் ஆகியவை இந்திய ரெயில்வேவின் உணவு பட்டியலில் இடம்பெற்றிருந்தது. 

ஆனால், அந்த உணவு பட்டியலை ஐஆர்சிடிசி சமீபத்தில் நீக்கியது. நீக்கப்பட்ட அந்த உணவுகளுக்கு பதிலாக கச்சோரி மற்றும் சோலே பதுரே எனப்படும் வட இந்திய உணவுகள் சேர்க்கப்பட்டன.

இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், சமூக வலைதளங்களிலும் இந்திய ரெயில்வேயின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான கண்டனக்குரல் எழுந்தது. இது தொடர்பாக போராட்டங்களும் நடைபெற்றது. 



இந்த விவகாரம் தொடர்பாக எர்ணாகுளம் எம்.பி. ஹிபி ஈடன் மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதினார். 

உணவு கேரள மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ரெயில்வேயில் உணவின் அடிப்படையில் கேரள மக்களுக்கு எதிராக பாகுபாடு காண்பிக்கப்படுகிறது. ஆகையால் நீக்கப்பட்ட கேரள உணவுகளை ரெயில்வே அட்டவணையின் மீண்டும் சேர்க்கவேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில் நீக்கப்பட்ட கேரள உணவுகளான புட்டு, கடலை கறி, முட்டை கறி, அப்பம் மட்டுமல்லாமல் புதிதாக சில உணவுகளும் ஐஆர்சிடிசி உணவு பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. 

புதிதாக சேர்க்கப்பட்ட உணவு பட்டியல் விவரத்தை ஐஆர்சிடிசி அதிகாரிகள் எர்ணாகுளம் எம்.பி. ஹிபி ஈடனிடம் சமர்ப்பித்தனர். 
Tags:    

Similar News