செய்திகள்
மங்களூர் விமான நிலையம்

மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தவர் போலீசில் சரண்

Published On 2020-01-22 06:16 GMT   |   Update On 2020-01-22 06:16 GMT
மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தது தொடர்பாக ஆதித்யா ராவ் என்பவர் பெங்களூர் அல்சூர் கேட் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
மங்களூர்:

கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே அனாதையாக பை ஒன்று கிடந்தது. அதை சோதனை செய்தபோது வெடிகுண்டுகள் இருந்தன.

இதையடுத்து அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று செயலிழக்க வைத்தனர். வெடிகுண்டு பையை விமான நிலையத்தில் வைத்து சென்ற நபரை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் தொப்பி அணிந்த நபர் ஒருவர் ஆட்டோவில் விமான நிலையத்துக்கு வந்து வெடிகுண்டு பையை வைத்து சென்றது பதிவாகி இருந்தது.

இதையடுத்து மர்மநபர் புகைப்படத்தை வெளியிட்டு அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். அவர் வந்த ஆட்டோவை பற்றி விசாரித்தனர்.

மேலும் சிறப்பு பாதுகாப்பு படையினர், தீவிரவாத தடுப்பு படையினர் மங்களூர் விமான நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விமான நிலைய அதிகாரிகளிடமும், உள்ளூர் போலீசாரிடமும் தகவல்களை சேகரித்தனர்.

இந்த நிலையில் மர்ம நபரை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் தானாக முன்வந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அப்போது ஆட்டோ டிரைவர் கூறும்போது, மர்மநபரை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை என்றும் அவர் துளு மொழியில் பேசினார் என்றும் தெரிவித்தார்.

மர்மநபர் தொடர்பாக மேலும் 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் மர்ம நபர் பற்றி துப்பு துலங்கியது. இதையடுத்து அவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மங்களூரில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தது தொடர்பாக ஆதித்யா ராவ் என்பவர் பெங்களூர் அல்சூர் கேட் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இவர் உடுப்பி மாவட்டம் மணிப்பால் பகுதியை சேர்ந்தவர். என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரியான இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகி இருந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.



ஆதித்யா ராவுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆதித்யா ராவ் சரண் அடைந்தது தொடர்பாக மங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மங்களூர் தனிப்படை போலீசாரும் பெங்களூர் விரைந்துள்ளனர். ஆதித்யா ராவிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின்னர் தான் அவர் விமான நிலையத்தில் எதற்காக வெடிகுண்டு வைத்தார் என்பது தெரியவரும்.

Tags:    

Similar News