செய்திகள்
கோப்பு படம்

மகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை - ராஜஸ்தான் கோர்ட் தீர்ப்பு

Published On 2020-01-22 05:33 GMT   |   Update On 2020-01-22 09:08 GMT
17 வயது மகளை கற்பழித்து கொலை செய்த தந்தைக்கு ராஜஸ்தான் கோர்ட் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
கோடா:

ராஜஸ்தான் மாநிலம் கோடா அருகே உள்ள நயபுரா பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த 2015-ம் ஆண்டு மே 13-ந் தேதி வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் அவரை கற்பழித்து கொலை செய்தது அவரது தந்தை என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயிடம் நடத்திய விசாரணையில் தனது கணவர் நீண்ட காலமாக மகளை கற்பழித்ததாக வாக்கு மூலம் அளித்தார்.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்தனர். மேலும் டி.என்.ஏ. பரிசோதனையிலும் அவர் தான் குற்றவாளி என்பது உறுதியானது.

இந்த வழக்கு கோடா போஸ்கோ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நீதிபதி அசோக் சவுத்ரி தீர்ப்பு கூறினார். அப்போது இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில் இந்த குற்றம் மனித சமுதாயத்திற்கு மிகவும் கொடூரமான மற்றும் வெட்கக்கேடானது என குறிப்பிட்டிருந்தார். மேலும் தூக்கு தண்டனையுடன் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News