செய்திகள்
ஆந்திர சட்டசபை

ஆந்திராவில் 3 தலைநகர் திட்டத்துக்கு அனுமதி- சட்டசபையில் மசோதா தாக்கல்

Published On 2020-01-20 09:39 GMT   |   Update On 2020-01-20 10:46 GMT
ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் அமைப்பது குறித்த மாநில அரசு தயாரித்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அமராவதி:

ஒன்றுபட்ட ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திராவின் தலைநகராக அமராவதி தேர்வு செய்யப்பட்டது. எனவே அந்த நகரை சர்வதேச தரத்தில் அமைப்பதற்கு அப்போதைய முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஆனால் கடந்த மே மாதம் ஆந்திராவில் ஜெகன்மொகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.

அமராவதியை தலை நகராக கட்டமைத்த பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் ஆந்திராவுக்கு 3 தலைநகர் அமைக்க ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்தார். விசாகப்பட்டினம், அமராவதி, கர்னூல் ஆகிய 3 தலைநகர் அமைக்க திட்ட மிடப்பட்டது.

அமராவதியை மாற்றும் திட்டத்துக்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆந்திராவுக்கு 3 தலை நகர் திட்டத்துக்கான மசோதாவை தாக்கல் செய்ததற்கான சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 3 நாள் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. முன்னதாக ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


ஆந்திர சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் அமைப்பது குறித்த மாநில அரசு தயாரித்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

நிர்வாக பணிகளுக்காக விசாகப்பட்டனமும், சட்ட பேரவைக்கு அமராவதியும், நீதித்துறைக்கு கர்னூலும் என 3 தலைநகர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திர சட்டசபையில் ஆளும் கட்சிக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் இந்த மசோதா எளிதில் நிறைவேறும்.

Tags:    

Similar News