செய்திகள்
சபரிமலையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் கூட்டம்.

சபரிமலையில் 20-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி

Published On 2020-01-17 05:04 GMT   |   Update On 2020-01-17 05:04 GMT
சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் வருகிற 20-ந்தேதி இரவு வரை அனுமதிக்கப்படுவார்கள்.
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த 15-ந்தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெற்றது.

பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ தீபாராதனை காட்டப்பட்டு மகரவிளக்கு பூஜை நடந்தது. அதேநேரம் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடந்தது. சபரி மலையில் குவிந் திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தனர்.

மகரவிளக்கு பூஜைக்கு பிறகும் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது. தலையில் இருமுடி கட்டு சுமந்து சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோ‌ஷம் முழங்க குழு குழுவாக சென்று பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

வருகிற 20-ந்தேதி இரவு வரை பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த நாட்களில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும். மறுநாள் (21-ந்தேதி) காலை 6 மணிக்கு பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார். அதைத்தொடர்ந்து சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.

சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் அங்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை வரும் பக்தர்கள் பிரசாதமாக வாங்கிச் செல்லும் அரவணை, அப்பம் ஆகியவை தட்டுப்பாடு இன்றி கிடைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்து உள்ளது.



Tags:    

Similar News