செய்திகள்
பாராளுமன்றம்

சைவத்துக்கு மாறுமா பாராளுமன்ற கேன்டீன்?

Published On 2020-01-14 06:51 GMT   |   Update On 2020-01-14 06:51 GMT
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனை நடத்தும் பொறுப்பு தனியார் நிறுவனத்துக்கு சென்றால் உணவு பட்டியலில் முழுக்க சைவ உணவுகளே இடம் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனை தற்போது ரெயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. நடத்தி வருகிறது.

இங்கு மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த மாதம் கேன்டீனுக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தை ரத்து செய்ய அனைத்து எம்.பி.க்களும் ஒப்புதல் அளித்தனர். இதைத் தொடர்ந்து கேன்டீன் உணவுகள் உரிய விலையில் விற்கப்பட்டு வருகிறது.

மானியம் ரத்து செய்யப்பட்டதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.17 கோடி சேமிப்பு கிடைக்கும்.

இந்த கேன்டீனில் தயாரிக்கப்படும் பிரியாணி, சிக்கன் கட்லெட்டுகள், மீன் மற்றும் சிப்ஸ் ஆகியவை அசைவத்திற்கு பெயர் பெற்றவை.

இதே போல் கிச்சடி, பொங்கல், பழங்கள், ஜுஸ்கள் போன்றவையும் இங்கு கிடைக்கும்.

கடந்த சில மாதங்களாக கேன்டீனில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் கேன்டீனை நடத்தும் பொறுப்பு ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாற்றப்படலாம் என தெரிகிறது.

கேன்டீனை நடத்துவதற்கான போட்டியில் தனியார் நிறுவனங்களான பிகேர்னெர் வாலா, ஹால் டிராம் மற்றும் அரசு நிறுவனமான ஐ.டி.டி.சி. ஆகியவை உள்ளன. இவற்றில் தனியார் நிறுவனங்களில் இரண்டில் ஒன்று தான் கேன்டீன் நடத்தும் பணியை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த இரு நிறுவனங்களுமே பிரபல சைவ உணவகங்கள். தொடக்கம் முதலே இந்நிறுவனங்கள் சைவ உணவுகளை மட்டுமே வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் கேன்டீனை நடத்தினால், கேன்டீன் உணவு பட்டியலில் முழுக்க சைவ உணவுகளே இடம் பெறும். கேன்டீன் சுத்த சைவமாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனினும் இது தொடர்பாக எந்த முடிவும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை. புதிய கேன்டீன் பொறுப்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தான் இறுதி முடிவு எடுக்க உள்ளார். இது குறித்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News