செய்திகள்
பிரதமர் மோடி

கொல்கத்தா துறைமுகம் இனி சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என அழைக்கப்படும் - பிரதமர் மோடி

Published On 2020-01-12 08:04 GMT   |   Update On 2020-01-12 08:04 GMT
மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள கொல்கத்தா துறைமுகம், இனி சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு நேற்று மாலை சென்றார். கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். ராஜ்பவனில் தங்கிய பிரதமர் மோடியை அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.

இதற்கிடையே, ஹவுராவில் உள்ள பேளூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைமை அலுவலகத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோருக்கு மரியாதை செய்து வழிபட்டார் பிரதமர் மோடி. தொடர்ந்து, மடத்தில் நடைபெற்ற பஜனையிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள கொல்கத்தா துறைமுகம், இனி சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

கொல்கத்தா துறைமுகம் இனி சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என அழைக்கப்படும். மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

கொல்கத்தா துறைமுக வளர்ச்சிக்காக எடுத்து வரும் முன்னேற்ற நடவடிக்கைகளால், அண்டை நாடுகளான பூடான், மியான்மர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடனான வர்த்தகம் விரைவாகவும், எளிதாகவும் நடைபெறும்.

மத்திய அரசின் திட்டங்களான ஆயுஷ்மான் பாரத் யோஜனா மற்றும் பிரதமர் கிசான் சம்மான் உள்ளிட்ட திட்டங்களை மேற்கு வங்காள அரசு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடையும் என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கொல்கத்தா துறைமுக விழாவை முதல் மந்திரி மம்தா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News