செய்திகள்
அம்ருதா பட்னாவிஸ் மற்றும் தேவேந்திரபட்னாவிஸ்

மகாராஷ்டிரா போலீசார் சம்பள கணக்கு வைத்திருக்கும் வங்கியை அதிரடியாக மாற்ற முடிவு... காரணம் என்ன?

Published On 2019-12-26 17:20 GMT   |   Update On 2019-12-26 17:20 GMT
தேவேந்திர பட்னாவிஸ் மனைவி பொறுப்பு வகிக்கும் தனியார் வங்கியில் வைத்திருக்கும் போலீஸ் துறையின் ஊதியம் கணக்குகளை அரசு வங்கிக்கு மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 2014 முதல் 2019 வரை முதல் மந்திரியாக செயல்பட்டவர் பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ். இவரது ஆட்சி காலத்தில் அம்மாநில போலீஸ் துறையினருக்கான ஊதியம் கணக்கு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் இருந்து அவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஆக்சிஸ் வங்கி என்ற தனியார் வங்கிக்கு மாற்றப்பட்டது. 

இதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தின் போலீசாருக்கு வழங்கப்படும் ஊதியம் ஆக்சிஸ் வங்கி மூலமாகவே பரிமாற்றம் செய்யப்பட்டு வந்தது.

இதற்கிடையில்,  அம்மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இதில் சிவசேனா கட்சி தலைவரான உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார்.

உத்தவ் தாக்கரே ஆட்சி பொறுப்பெற்றதிலிருந்தே பாஜக தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ்க்கும் சிவசேனா தலைவர்களுக்கும் இடையே வார்த்தைப்போர் நடைபெற்றுவருகிறது. 


 
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில போலீசாரின் ஊதிய கணக்குகளை  பட்னாவிஸ் மனைவி முக்கிய பொறுப்பு வகிக்கும் ஆக்சிஸ் வங்கியில் இருந்து அரசுடமையாக்கப்பட்ட வங்கிக்கு மாற்றம் செய்ய உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. 

இதன் மூலம் ஆக்சிஸ் வங்கி ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை குறைய உள்ளது.

சிவசேனா அரசின் இந்த நடவடிக்கையால் கோபம் அடைந்த அம்ருதா பட்னாவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சனம் செய்து தொடர்ந்து செய்திகளை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு செய்தியில்,'' தங்கள் பெயருக்கு பின்னால் தாக்கரே என வைத்துகொண்டவர்கள் எல்லாம் தாக்கரே ஆகிவிட முடியாது. அதிகாரம் மற்றும் தனது சொந்த குடும்பத்தை தாண்டி உண்மையாகவும், ஒழுக்கமாகவும் இருந்து மக்களுக்காகவும், கட்சியினருக்காகவும் செயல்படுபவரே தாக்கரே’’ என தெரிவித்தார்.

இந்த கருத்தால் சிவசேனாவுக்கும், அம்ருதாவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவிவருகிறது.

இந்நிலையில், சிவசேனா ஆட்சியில் இருக்கும் தானே மாநகரட்சி நிர்வாகம் தங்கள் ஊழியர்கள் ஆக்சிஸ் வங்கியில் வைத்துள்ள ஊதிய கணக்குகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மாற்ற உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை உடனடியாக செயல்படுத்தும்படி தானே மேயர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News