செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

வன்முறை போராட்டங்களை அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து

Published On 2019-12-16 07:59 GMT   |   Update On 2019-12-16 07:59 GMT
போராட்டம் என்ற பெயரில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவதை அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இதே போல மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அலிகார் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டது. அப்போது ஒரு கும்பல் 4 அரசு பஸ்களை தீ வைத்து கொளுத்தியது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

டெல்லி ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு செய்யப்பட்டது.

போராட்டத்தை கட்டுப்படுத்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை தாமாக முன்வந்து விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுகுறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு கூறியதாவது:-

போராட்டம் என்ற பெயரில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவதை அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை. சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவே காவல்துறையினர் உள்ளனர். முதலில் அங்கு அமைதி நிலவட்டும்.

பல்வேறு பகுதிகளில் நடக்கும் வன்முறை போராட்டம் நிறுத்தப்பட்டால் மட்டுமே வழக்கை விசாரிக்க முடியும்.

ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் யார் கலவரம் செய்தனர்? யார் அமைதியாக போராடினார்கள்? என்பதை இப்போது எங்களால் சொல்ல முடியாது. வன்முறையை நிறுத்தினால் வழக்கை நாளையே விசாரிக்கிறோம்.

இவ்வாறு தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
Tags:    

Similar News