செய்திகள்
எடியூரப்பா

இடைத்தேர்தலுக்கு பிறகு எனது அரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கும்: எடியூரப்பா நம்பிக்கை

Published On 2019-11-30 02:30 GMT   |   Update On 2019-11-30 02:30 GMT
இடைத்தேர்தலுக்கு பிறகு எனது அரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலையொட்டி ராணிபென்னூர் தொகுதியில் நேற்று பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. நிலையான ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதாவை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். டிசம்பர் 9-ந் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளுக்கு ஏமாற்றம் தருவதாக இருக்கும்.

எந்த கட்சியின் ஆதரவையும் பெறாமல் நாங்களே பெரும்பான்மையுடன் மீதமுள்ள ஆட்சி காலத்தை நிறைவு செய்வோம். பிற கட்சிகளின் ஆதரவை கோரும் நிலை பா.ஜனதாவுக்கு வராது. நான் முதல்-மந்திரியாக நீடிக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அதனால் வாக்காளர்கள் பா.ஜனதாவை ஆதரிப்பார்கள்.

நான் 15 தொகுதிகளில் ஒரு சுற்று பிரசாரத்தை முடித்து, நேற்று (நேற்று முன்தினம்) முதல் 2-வது கட்ட பிரசாரத்தை தொடங்கியுள்ளேன். மக்கள் எங்களின் எதிர்பார்ப்பைவிட கூடுதல் ஆதரவை வழங்கி வருகிறார்கள். சட்டசபைக்கு இப்போதே தேர்தல் வரட்டும் என்று எதிர்க்கட்சிகள் காத்து கிடக்கின்றன. இதற்கு வாக்காளர்கள் வாய்ப்பு வழங்க மாட்டார்கள்.

இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு கர்நாடக அரசியலில் எந்த அதிசயமும் நிகழாது. நான் முதல்-மந்திரியாகவும், சித்தராமையா எதிர்க்கட்சி தலைவராகவும் நீடிப்போம். எதிர்க்கட்சி தலைவர்கள் காணும் கனவு ஒருபோதும் நிறைவேறாது. பா.ஜனதாவில் அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம். எங்களிடம் எந்த கோஷ்டி பூசலும் இல்லை.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Tags:    

Similar News