செய்திகள்
சரண் அடைந்த நக்சலைட்டுகள்

ரூ. 31.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த 6 நக்சலைட்டுகள் சரண்

Published On 2019-11-27 12:31 GMT   |   Update On 2019-11-27 12:31 GMT
மகாராஷ்டிராவில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து, 31.5 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த 5 பெண்கள் உள்பட 6 நக்சலைட்டுகள் இன்று சரணடைந்தனர்.
நாக்பூர்:

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திவரும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். 

குறிப்பாக சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில  மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் பொதுமக்கள், போலீசார் மீது அவ்வப்போது பயங்கர தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த குழுவினரை வேட்டையாட மாநில சிறப்பு தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நக்சலைட்டுகள் அவரவர் செய்த குற்றங்களின் அடிப்படையில் தேடப்படும் நக்சலைட்டுகளின் தலைக்கு அரசு சார்பில் லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்படுவதுண்டு.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றிய ஐந்து பெண்கள் உள்பட 6 பேர் இன்று போலீசில் சரணடைந்தனர். 

இவர்களில் மஹரூவாடி (30) என்பவரின் தலைக்கு 6.25 லட்சம் ரூபாய் சன்மானமாக அறிவிக்கப்பட்டிருந்தது.



மேலும், கங்காபாய் குர்ஜமி (30), சரிதா அட்லா (23), நிலா துலவி (25), மம்தா பல்லோ (20) மற்றும் கோரமி (24) ஆகிய ஐந்து பெண் நக்சலைட்டுகளின் தலைக்கும் தலா ரூ.5 லட்சம் முதல் 5.5 லட்சம் ரூபாய் வரை சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இன்று சரணடைந்த 6 நக்சலைட்டுகளின் தலைகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த சன்மானத்தொகையின் மொத்த மதிப்பு 31.5 லட்சம் ரூபாய் ஆகும். 

மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் கடந்த மே மாதம் போலீஸ் வாகனத்தை குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 16 போலீசார் உயிரிழந்தனர். 

இதையடுத்து, அப்பகுதி முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.  இந்த ஆண்டில் இதுவரை இம்மாவட்டத்தில்  29 நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News